Thursday, May 12, 2005

குமிழ்

Gobble Posted by Hello

'05 மே, 12 வியா. 18:44 கிநிநே.


A Street Car Named Desire

"இன்றிரவுக்கேதுணவு?" என்றாள்.

"ஆசை" என்றான் அவன்.

"தினசரி
ஒன்றையே
தின்று தின்று
ஜீரணிக்க முடியவதில்லை"
-நிலம் நோக்கி அவள் சொன்னாள்.

சோடிய ஆவித் தெரு விளக்கு
மெல்லச் சிரித்திருக்கும்
ஒளி பரப்பி.

"என்ன செய்ய?
என்னிடம் எஞ்சியிருத்தல்
எல்லாம் இது ஒன்றே
இன்றைக்கு...
என் அன்பே,
என்ன செய்ய? - இந்நிலையில்
நான்
என்ன செய்ய?"
-துளி வியர்த்து துயர் பரப்புவான்.

தூரத்து நிலவொளி எறிக்கும்
அவள் வதனத்தில்.
வேதனைக்கிரகணம் மறைக்கும்
அவன் விழிகளை.

"ஏது செய்ய?
நிதம் தினம்
தின்னத் தின்ன
அடங்கலில்லை
பசி;
தின்றதும்,
ஆகிச் செரிதலில்லை.
ஆதலினால்,
இன்றிரவு எனக்கு வேண்டா
உன் மண்டிய ஆசை.
கொண்டு போ;
வேண்டிக் கிடப்பாருக்கு
விற்றேதும் வேறு பெற்று
வாங்கி வா
நாமுண்ண
பொருள் கொண்டு."
-நிலம் நோக்கிச் சோர்ந்தனள்,
அவலம் சேர் இளமாது.

வீதி விளக்கு,
தகித்தது.
விம்மியது அதன் ஆவி
வெடிப்புற்று
ஒளித்துமி தும்மி.
விரகம் அதனோடு
வெளிப் பரவி
வியாபித்தது.

அவன் துன்பமுற்றான்;
அவள் துவளல் கண்டு
காதல் மனம்,
கனத்து
நிலை
தொய்வுற்றான்.

"என்னிடத்தே
நீ விற்ற
உன் ஆசைகளை
எத்தெருவில்
எவளிடத்தில்
எவ்வண்ணம்
யான் விற்றுவைப்பேன்?
வேண்டுமானால்,
மீண்டும்
நீயே வாங்கி கொள்."


"விலை குறைத்து, பொருள் குறைத்து
விற்றதனை வாங்கி வைத்தல்
வியாபாரத்தே கண்டதுண்டோ?
வேண்டுமானால்,
வீதி மருங்கு விளக்கடியே
குவித்துக் கொட்டிவை;
வேண்டியோர்கள்,
கை அகழ்ந்து ஏந்திப் போகட்டும்;
செயல் நிகழ்த்த
இருப்புடையார்
இல்லம்
எங்கேனும்
தாமேனும்
வாழ்ந்திருக்கட்டும்
இன்பமாய்
எம் இள ஆசைகள்."

பழையன தொலைத்து
அடுத்த நாளைக்கு
புது ஆசைகள்
வாங்கிப் போனார்,
மனக்கடல்
இன்றைக்குக்
கைவிலக்கி
அவரவர் திசை
வழி கண்டு
இளம் காதலர்கள்.

விரயமான
வீதி நிலத்து ஆசைகளை
விளக்கு விழுங்கிற்று.
பிறர் மனத்தே
தேங்கிய ஆசைகளைத்
தின்றிருத்தல் மட்டுமே
அதன் தூணைத்
துணையாய்த்
தாங்கிக் கிடத்தலாயிற்று;
அதன் ஆவி
அவ்வப்போது ஓங்கி எரியும்,
மோகத்தால்,
முடியாத்தனத்தால்.

வீதி விளக்கடியில்
ஆசை மொட்டுக்கள் என்றும்
அநாதையானதில்லை.
காதலர்
தொலைத்துப்போன துயர் தொட்டு
விலக்கிப்போன வினாக்கள் வரையிட்டு
தான் தின்று
ஒளிக் கதிரூடே
பின் வரு
பெண் ஆண்,
துருத்து
மனத்தே
துளைத்திருக்கக்
காத்திருக்கும்
சாலையோரச் சோடிய விளக்கு.

சார்ல்ஸ்
வீதிக்கார் வரும்,
விளக்குத்தூண் விலக்கி,
நான் ஏறுவேன்....
................புதிதாய் எனக்கென்று
.......................சில கனவேந்தி
- இவ் வொருத்தன் தனி இரவுக்கு,
மேலும் சில,
என்றேனும் வரப்போகும்
அல்லது என்றைக்குமே
வராமலே போகக்கூடும்
என்றான
அவளுக்கு,
எனக்கியன்ற என் பங்குச் சேகரிப்பாய்.

98/12/14 23:25 CST

0பின்னூடுகை:

Post a Comment

<< Home